கிராமசபை கூட்டம்


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் திருப்பாற்கடல் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருபாற்கடல் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா தனஞ்செழியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டபிள்யு.வி.ரவி, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சங்கர் வரவேற்றார்.

கிராம சபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது உலக தண்ணீர் தினம் 1993-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. நீர்வளத்தைக் காப்பது அதனை பெருக்குவது குறித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும். நீர் பிடிப்பு பகுதிகளில் எவ்வித ஆக்கிரமிப்புகள் இல்லாமல் மழை நீரை நாம் சேமிக்க வேண்டும். நீர் நிலைகளில் கழிவுகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் கொட்டி நீரினை மாசுபடுத்தக் கூடாது. நீர் மாசடைந்தால் சுற்றுச்சூழல் தானாகவே பாதிப்புக்குள்ளாகும்.

குடிநீர் இணைப்பு


வேளாண்மைக்கும், அன்றாடத் தேவைகளுக்கும் நீரினை சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும். இயற்கையை காப்பாற்றிட அதிகமாக மரங்களை நடவேண்டும். தேவையில்லாமல் நீரினை வீண் செய்யக்கூடாது. இதுவரை ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 64 ஊராட்சிகளில் 100 சதவீதம் வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கி இருக்கின்றோம். திருப்பாற்கடலில் உள்ள 596 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இதேபோன்று 100 சதவீதம் குழாய் இணைப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மக்கள் தண்ணீரின் அவசியத்தையும் எதிர்கால சந்ததியினர் தண்ணீர் பிரச்சினையை எதிர் நோக்காமல் வாழ்ந்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து தண்ணீரை பாதுகாக்க மரங்களை அதிக அளவில் நட்டு பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

ஆய்வு


இதனைத் தொடர்ந்து கள நீர் தரப்பரிசோதனை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்கு மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தையும் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளிடம் உணவு தரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த இருளர் இன தம்பதியினருக்கு உதவி புரியவும், ஊராட்சி மன்ற தலைவருக்கு அறிவுறுத்தினார்.

ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஏ.எஸ்.குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அரிகிருஷ்ணன், ஊராட்சிமன்ற துணை தலைவர் யுவராணி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 29 ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசன், பாலாஜி, துணை வட்டார வளவ்ச்சி அலுவலர் குணசுந்தரி, மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உடன் இருந்தனர்.