ராணிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நிதியுதவி பள்ளியான வி.ஆர்.வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி பிரியதர்ஷினி. இவர் தினமும் அவரது கிராமமான தகரகுப்பம் பகுதியிலிருந்து பள்ளியில் நடைபெறும் சிறப்பு வகுப்பிற்கு காலை எட்டு முப்பது மணிக்கு செல்ல வேண்டும்.‌ அந்த நேரத்தில் பேருந்து சேவை அப்பகுதியில் இல்லை. மேலும் எட்டு மணிக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் காலை ஏழு முப்பது மணிக்கு வரக்கூடிய பேருந்து அதிக கூட்டமாக வருகின்றது. இதனால் சிறிய வகுப்பு மாணவர்கள் முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் வரை ஏழு முப்பது மணிக்கு வரக்கூடிய பேருந்தில் கூட்ட நெரிசலில் தினமும் பயணிப்பதாக மாணவி வேதனை தெரிவித்தார்.‌

மேலும் அப்பகுதி வழியாக 8 மணிக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுவதாகவும், குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வர இயலவில்லை எனத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை வழங்கியுள்ளார். அதில் காலை ஏழு முப்பது மணிக்கு இயக்கப்படுகின்ற பேருந்தையும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எட்டு மணிக்கு இயக்கப்படுகின்ற பேருந்தையும், மேலும் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்து சேவையை இயக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவி கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.

கோரிக்கை பதிவினைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக மாணவிக்கு உத்திரவாதம் கொடுத்தார். மேலும் துணிச்சலுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் தெரிவித்த மாணவியை மாவட்ட ஆட்சியர் பாராட்டி வாழ்த்தி அனுப்பினார்.