தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் திடீர் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இரவு 8 மணியிலிருந்து மின்வெட்டு நிலவியது. 4 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சேவுர், குன்னத்தூர், கண்ணமங்கலம், களம்பூர் உள்ளிட்ட பல கிராமங்களில் 2 மணி நேரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதேபோல வந்தவாசி, செய்யார், போளூர் ஆகிய பகுதிகளிலும் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கோணம், பார்வதிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரமாக மின் வெட்டு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இதுபோன்ற அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டதன் காரணமாக பொது மக்கள் கடும் அவதியடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிகுப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு 8 மணியில் இருந்து மின்சாரம் நிறுத்தப்படுள்ளது. திருநெல்வேலியிலும் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்தடை குறித்து நெட்டிசன்கள் ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.