ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காஞ்சனகிரி மலையில் புராதான பெருமை மிக்க காஞ்சனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் சித்ரா பவுர்ணமி, மாதந் தோறும் நடக்கும் பவுர்ணமி பூஜை ஆகியன பிரசித்தி பெற்றது.

நேற்று முன்தினம் காஞ்சனகிரி மலை கோயிலில் நடந்த பவுர்ணமி பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அங்குள்ள உண்டியல்களில் காணிக்கை பணம் செலுத்தினர். பின்னர் கோயிலை பூட்டிவிட்டு அர்ச்சகர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அன்று இரவு மர்ம நபர்கள் சிலர் கோயிலுக்குள் புகுந்துள்ளனர். அங்குள்ள ஆயிரத்து 8 சுயம்பு லிங்கம் அமைந்துள்ள பகுதியில் வைத்திருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த காணிக்கை பணத்தை திருடிச்சென்று விட்டனர். 

இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.