ராணிப்பேட்டை மக்களின் 27வருட கோரிக்கை; க்ரீன் சிக்னல் காட்டிய அமைச்சர் மெய்யநாதன்! 

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள மூடப்பட்ட குரோமிய தொழிற்சாலை வளாகத்தில் கடந்த 27 ஆண்டுகளாக மலைபோல் தேங்கியிருக்கும் குரோமிய கழிவுகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வந்த டிசிசி குரோமிய தொழிற்சாலை கடந்த 1995ம் ஆண்டு மூடப்பட்ட போது 2.50 லட்சம் மெட்ரிக் டன் குரோமிய கழிவுகள் தொழிற்சாலை வளாகத்திலேயே தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மலை போல் குவிந்துள்ள இந்த குரோமியக்கழிவுகள் புற்றுநோய் உள்பட பல மோசமான நோய்களை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால் கடந்த 27 ஆண்டுகளாக இதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் குரோமிய கழிவுகள் தேக்கி வைக்கப்பட்டுள்ள டிசிசி குரோமிய தொழிற்சாலையை இன்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மற்றும் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன்; சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் குரோமிய கழிவுகளை நிரந்தரமாக அகற்ற சுற்று சூழல் அதிகாரிகள் 4 மாதங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கழிவுகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மெய்யநாதன் உறுதியளித்தார். குரோமிய கழிவுகளை அகற்றுவது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில், சென்னை ஐஐடி கல்லூரி அறிவியல் வல்லுனர்களின் உதவியோடு கழிவுகளை அகற்றப்படும் என கூறினார்.

மஞ்சப்பை திட்டத்தின் கீழ் 20% பிளாஸ்டிக் பயன்பாடு குறைவு

தமிழகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளால் குறிப்பாக மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் வாயிலாக தமிழகத்தில் 20% பிளாஸ்டிக் பயன்பாடு ஒட்டுமொத்தமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் இந்த பசுமையை பாதுகாக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் 10,000 குறுங்காடுகள் உருவாக்கப்பட இலக்கு

அந்தவகையில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தில், அந்நிய நாட்டு மரங்களை புறக்கணித்து நாட்டு மரங்களை வளர்க்கும் வகையில் ஒரு குறுங்காட்டிற்கு 1000 மரங்கள் வீதம் நட்டு வைத்து குறுங்காடு உருவாக்கப்படுகிறது. அதே போல் நடப்பாண்டில் 10,000 குறுங்காடுகள் உருவாக்கப்பட இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறினார். அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 2 கோடியே 60 லட்சம் மரங்கள் நட்டு வைத்து பசுமை பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.