தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடை பெறுகிறது. 7,301 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள இந்தத்தேர்வை 22 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.

இதற்காக 316 வட்டங்களில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்கை கடந்த மார்ச் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள், 3,678 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 50 வரித்தண்டலர், 2,108 தட்டச்சர் பணியிடங்கள், 1,024 சுருக்கெழுத்து தட்டச்சர், ஒரு பண்டகக் காப்பாளர் என 7,138 காலிப்பணியிடங்களும், பல்வேறு வாரியங்களில் 163 காலிப் பணியிடங்களும் என மொத்தம் 7,301 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 22 லட்சம் பேர்: குரூப் 4 தேர்வை எழுத 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இதுவரை நடந்த குரூப்- 4 தேர்வுகளில் அதிகபட்ச அளவில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த தேர்வு இதுவாகும். காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். தமிழ்மொழியில் இருந்து 100 வினாக்களும், பொது அறிவு, அறிவுக்கூர்மை தொடர்பான பிரிவுகளிலிருந்து 100 கேள்விகளும் என 200 கேள்விகள் கேட்கப்படும். இவற்றுக்கான மொத்த மதிப்பெண்கள் 300.

தேர்வை நடத்துவதற்கான விரிவான ஏற்பாடுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்துள்ளது. 38 மாவட்டங்களில் 316 வட்டங்கள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வட்டங்களில் 7,689 தேர்வு அமை விடங்கள் ஏற்படுத்தப்பட்டுள் ளன.

கடும் கட்டுப்பாடுகள்: தேர்வு எழுத வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.