ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.

அந்த ஆரம்பப் பள்ளி வட்டாரத்தில் ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. அந்த குடியிருப்பு பகுதியில் அசோசியேஷன் சார்பில் இன்று கொசு மருந்து அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த கொசு மருந்து புகை காற்றில் பரவி அருகே உள்ள ஆரம்பப் பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவ மாணவிகள், பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர் மற்றும் சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சுகாதாரத் துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களை பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில் மாணவர்கள் வீட்டில் இருந்தே உணவு எடுத்து வந்ததாகவும் அவர்களின் வாந்தி மற்றும் மயக்கத்திற்கு ஃபுட் பாய்சன் காரணம் இல்லை எனவும் தெரியவந்தது.

மேலும் ஹவுசிங் போர்டு சுற்றுவட்டார பகுதியில் அடிக்கப்பட்ட கொசு மருந்து காரணமாகவே மாணவர்களுக்கு உபாதைகள் ஏற்பட்டிருக்கலாம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். மேலும் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் காவல் துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொசு மருந்து அடித்ததன் காரணமாக அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவ மாணவிகள் வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு பாதிப்படைந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.