சோளிங்கர் அருகே பரவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (40). இவர், மருத்துவம் படிக்காமலேயே, பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சோளிங்கர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கருணாகரன் மற்றும் மருந்தாளர் சேகர் மற்றும் வருவாய் அலுவலர்கள் புகார் தெரிவிக்கப்பட்ட முருகன் வீட்டில் சென்று நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, விசாரணையில் அவர் அலோபதி மருத்துவம் படிக்காமல் மருத்துவர் எனக்கூறி, பொதுமக்களுக்கு காய்ச்சல், சர்க்கரை உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், ஊசிகளையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தார்.