ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பூட்டுத்தாக்கு ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் தர்ணா ஊராட்சி செயலாளரை நியமிக்கக் கோரிக்கை.
பூட்டுத்தாக்கு ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் பணியிடம் காலியாக உள்ளதால் வளர்ச்சி, திட்டப்பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே ஊராட்சி செயலாளரை நிரந்தரமாக நியமிக்க வேண்டி பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனை கண்டித்து ஊராட்சிமன்ற தலைவர் அருண் தலைமையில், துணைத் தலைவர் சசிகலா, வார்டு உறுப்பினர்கள் ஹிமானி, ஜெயந்தி, தமிழ்செல்வி, சாரதா ஆகிய 6 பேர் ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் ஆற்காடு ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்யநாதன் பேச்சு வார்த்தை நடத்தி பூட்டுத்தாக்கு ஊராட்சிக்கு நிரந்தரமாக ஊராட்சி செயலாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர். இந்த திடீர் தர்ணா போராட்டம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. 

இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.