அரக்கோணம் அருகே, பாறாங்கல்லை போட்டு விவசாயியை கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அவிநாசி கண்டிகையை சேர்ந்தவர் அருண், 32. விவசாயி. கடந்த 20 ம் தேதி மாலை வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. 23 ம் தேதி கண்டிகையில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் அருகே அவர் இறந்து கிடந்தார். அதிக மது குடித்து அவர் இறந்ததாக நினைத்து போலீசாருக்கு தெரியாமல் அவரது மனைவி மலர்கொடியின், 30, உறவினர்கள் அங்குள்ள சுடுகாட்டில் புதைத்து விட்டனர்.
அருணின் தந்தை கோவிந்தராஜ், 70, என்பவர் தன் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக பாணாவரம் போலீசில் புகார் செய்தார். இதனால் தாசில்தார் பழனிராஜன், இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் வருவாய்த்துறையினர் கடந்த 26 ம் தேதி மாலை 5:00 மணிக்கு அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது, அருணை அடித்துக் கொலை செய்ததாக சிலர் பேசிய ஆடியோ வாட்ஸ் ஆப்பில் வந்தது.இதனால் சந்தேகத்தின் பேரில், மோசூரை சேர்ந்த கட்டட தொழிலாளிகளான சந்தோஷ், 23, மாயாண்டி, 35, அவினாசி கண்டிகையை சேர்ந்த தரணி, 35, ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அதில் கடந்த 20 ம் தேதி தக்கோலம் சென்ற அருண் மது குடித்து விட்டு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அவினாசி கண்டிகை ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சந்தோஷ், மாயாண்டி, தரணி ஆகியோருடன் அவருக்கு வாய்த்தகராறு ஏற்பட்டது. ஏற்கனவே இவர்களுக்குள் முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் சேர்ந்து பாறாங்கல்லை எடுத்து அருண் மார்பில் போட்டு கொலை செய்து கண்டிகையில் உள்ள கோவில் அருகே பிணத்தை போட்டு விட்டு சென்றது தெரியவந்தது.போலீசார் சந்தோஷ், மாயாண்டி, தரணி ஆகியோரை இன்று கைது செய்து அரக்கோணம் கிளை சிறையில் அடைத்தனர்.