நாளை நவம்பர் 1ம் தேதி, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிக் கூடங்கள் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில் பள்ளி பஸ்களின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு முகாம் நேற்று ராணிப்பேட்டையில் நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.

கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பஸ்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். பிறகு அவர் டிரைவர்களிடம் வேகக் கட்டுப்பாட்டு எச்சரிக்கை அறிவிப்பு உட்பட பல சாலை விதிகள் குறித்து கேட்டு அவர்கள் சரியாக பதில் சொல்கிறார்களா? என, சோதித்தார். பிறகு டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடம் பேசிய அவர்,"குழந்தைகளுக்கும் டிராபிக் சிக்னல் குறித்து தெரிய வேண்டும் என்று பள்ளி பாடத்தில் அது சேர்க்கப்பட்டுள்ளது. பஸ்ஸை ரிவர்ஸ் எடுக்கும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மாணவர்களை இறக்கி விட்டவுடன் அவர்கள் சாலையை கடந்து சென்ற பிறகுதான் பஸ்ஸை எடுக்க வேண்டும். 
குழந்தைகள் பஸ்ஸில் இருக்கும்போது சடன் பிரேக் போடக்கூடாது. சாலையில் எந்தெந்த இடத்தில் வேகத்தை குறைத்து ஒட்ட வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பஸ்ஸில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பு உங்கள் கையில் உள்ளது. ஆகவே பஸ்ஸை ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்ட டிரைவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தார். 
பிறகு அவர் அனைத்து பள்ளி பஸ்களின் டிரைவர், கண்டக்டர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் ஒன்றை நடத்தும்படி வட்டார போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிட்டார். இதில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், செங்கோட்டுவேல் டிராபிக் இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார், மாவட்ட கல்வி அலுவல அங்குலட்சுமி, பஸ் டிரைவர்கள் கண்டக்டர்கள் கலந்து கொண்டன.