ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கள் மக்கள் குறைதீர்வு முகாம் நடந்தது. கலெக்டர் பாஸ் கரபாண்டியன் தலைமை வகித்து மனுக்களை பெற்றார். அப்போது மாற்று திறனாளிகள் கெலெக்டரிடம் மனு கொடுக்க காத்திருந்தனர்.
அதைக்கண்ட கலெக்டர் அவர்கள் இருப்பிடத்துக்கே சென்றார். அவர்களிடம் மனுக்களை வாங்கி உரிய அதிகாரிளிடம் கொடுத்தார். பொது மக்கள் சார்பில் நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம், கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள், மின்சாரத்துறை குறைகள் நீக்கவேண்டியும், வேலைவாய்ப்பு வேண்டும் என கோரியும் மொத்தம் 325 மனுக்கள் அளிக்கப்பட்டன. 

கலெக்டர் மனுக்களை சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கினார். மேலும் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட என்று வேண்டும் உத்தரவிட்டார். 

பிறகு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் சமூக நலத்துறையின் சார்பில் தையல் இயந்திரங்கள் வேண்டி பெண்கள் அளித்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து 11 பெண்களுக்கு தாலா ரூ.5500 மதிப்புள்ள தையல் மிஷின்களை கலெக்டர் வழங்கினார்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, துணை ஆட்சியர்கள் தாரகேஸ்வரி, இளவரசி, மணிமேகலை, மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமார் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.