அதிகப்படியான மழை காரணமாக நிலக்கரி உற்பத்தி மட்டும் அல்லாமல் சந்தைக்கு வரும் காய்கறி அளவுகளும் அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் நாட்டின் பெரும் நகரங்களில் விற்பனை செய்யப்படும் காய்கறி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர், சமையல் எண்ணெய் உடன் தற்போது காய்கறி விலையும் அதிகரித்துள்ளதால் ஏழை மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாகத் தக்காளி, வெங்காயம் விலையைக் கேட்டாலே தலைசுற்றுகிறது.

பெரு நகரங்கள்

பெரு நகரங்களில் அனைத்துத் துறையில் வளர்ச்சி அடைந்திருந்தாலும் விவசாயம் மற்றும் உணவு பொருட்களுக்கு அதிகளவில் சிறு கிராமங்கள் மற்றும் டவுன் பகுதிகளை மட்டுமே நம்பியுள்ளது. இந்த வேளையில் அதிகப்படியான மழை காரணமாக விளைச்சல் குறைந்ததுள்ளது.

தக்காளி விலை

இதனால் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு கிலோ தக்காளி விலை இன்று 95 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கொல்கத்தாவில் 93 ரூபாய், சென்னையில் 60 ரூபாய், டெல்லியின் 59 ரூபாய், மும்பையில் 53 ரூபாய், பெங்களூரில் 52 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

175 நகரங்கள்

மத்திய அரசின் நுகர்வு விவகார அமைச்சகம் செய்த ஆய்வில் 175 சிறு மற்றும் பெரு நகரங்களில் ஒரு கிலோ தக்காளி விலை சராசரியாகவே 50 ரூபாய்க்கும், 50 நகரங்களில் 50 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

மும்பை, டெல்லி

மும்பையில் கடந்த வாரம் 290 டன் தக்காளி வந்திருந்த நிலையில் தற்போதும் 241 டன் மட்டுமே வந்துள்ளது, இதேபோல் டெல்லியில் 545 டன்னில் இருந்து 528.9 டன்னாகக் குறைந்துள்ளது. இதனால் சப்ளை டிமாண்ட் பிரச்சனை பெரியதாக வெடித்துத் தக்காளி விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.

வெங்காயம்

இதேபோல் வெங்காயம் விளைச்சலும், சந்தைக்கு வரும் அளவீடும் அதீத மழையின் காரணமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாட்டின் பெரும்பாலான இடத்தில் ஒரு கிலோ வெங்காயம் விலை 60 ரூபாய் அளவீட்டில் உள்ளது. குறிப்பாக மும்பை, டெல்லி, பெங்களூர், சென்னையில் வெங்காயம் விலை 60 ரூபாயை கடந்துள்ளது.

தீபாவளி பண்டிகை

மேலும் வெங்காயம் விலை தீபாவளி பண்டிகை முடியும் வரையில் 60 ரூபாய் அளவீட்டில் தான் இருக்கும் என வெங்காய மண்டி உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் வெங்காயம் விலை அடுத்தச் சில வாரத்திற்குக் குறைய வாய்ப்பு இல்லை.

மக்களுக்குப் பாதிப்பு

தக்காளி, வெங்காயத்தைப் போலவே முட்டைகோஸ், சுரைக்காய் ஆகிய காய்கறியின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுடன் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர், சமையல் எண்ணெய் விலை உயர்வும் பெரும் பாதிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.