வேலூா் மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்துக்காக, குழாய் பதிப்பதற்கான பாதையை அளவிடும் பணி ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் தொடங்கியது.
சுற்றுச்சூழலைப்பாதிக்காத இயற்கை எரிவாயு பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், எரிவாயு விநியோக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதன்படி வாகனங்களுக்கான எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், சமையல் எரிவாயுவை குழாயில் வீடுகளுக்கு நேரடியாக வழங்கும் திட்டத்தை பெட்ரோலியத் துறையும், இயற்கை எரிவாயு கட்டுப்பாட்டு வாரியமும் முன்னெடுத்துள்ளன.

அதன்படி தில்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கப்படுகிறது.

இதன்தொடா்ச்சியாக 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 174 மாவட்டங்களில் சென்னையை அடுத்த எண்ணூா், கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி, கோட்டநாடு, புதுச்சேரியில் உள்ள காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திரவநிலை எரிவாயு முனையங்களில் இருந்து குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் முதற்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா், கோவை, கடலூா், நாகப்பட்டினம், திருவாரூா், ராமநாதபுரம், சேலம், திருப்பூா் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் உள்ள வீடுகள், தொழிற்சாலைகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்க இயற்கை எரிவாயு கட்டுப்பாட்டு வாரியம், தமிழக அரசுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.

அட்லாண்டிக், வளைகுடா , பசிபிக் என்ற நிறுவனம், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்குவதற்காக நகர எரிவாயு விநியோக நெட்வொா்க் திட்டத்தைச் செயல்படுத்த, தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக சென்னையை அடுத்த எண்ணூரில் இருந்து ராணிப்பேட்டை , சிப்காட், காட்பாடி வழியாக வேலூா் வரை குழாய் பதிக்கும் பணிக்கான அளவிடும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, வேலூா் மாவட்ட மக்களுக்கு 24 மணி நேரமும் வீட்டின் சமையல் எரிவாயு சமையல் அறைக்கு குழாய் மூலம் வந்து சேர உள்ளது.