வாலாஜாபேட்டை நகராட்சியில் வீட்டு வரி, குடிநீர் கட்டணங்கள் மற்றும் குத்தகை பாக்கி என பல கோடி ரூபாய் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இவற்றில் நகராட்சி குத்தகை பாக்கியை பல ஆண்டுகளாக கட்டாமல் இருக்கும் முக்கிய புள்ளிகளில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் முன்னணியில் இருந்து வருகின்றனர்.

குறிப்பாக அதிமுகவின் நகர செயலாளர் பஸ் ஸ்டாண்டில் ஒரு கடையை நாலு கடையாக பிரித்து வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதுடன் பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கி இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஓராண்டாக நகராட்சியில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் நகராட்சி நிர்வாகம் நிதிநிலை மோசமாகி தள்ளாடி இருந்து வருகிறது. இப்போது புதியதாக கமிஷனர் மகேஸ்வரி என்பவர் பொறுப்பேற்ற நிலையில் வரிவசூல் செய்யும் பணியை முடுக்கி விட்டுள்ளார்.

சில நாட்களாக அவரே களத்தில் இறங்கி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவரது தலைமையில் மேலாளர் (பொறுப்பு) முத்துக்குமார் பில் கலெக்டர்கள் செல்லதுரை, சண்முகம், பரந்தாமன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் குத்தகை பாக்கி உள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் இறங்கினர்.

பஸ் ஸ்டாண்டில் உள்ள அதிமுக நகர செயலாளரின் கடைகளுக்கு சீல் வைக்க முயன்ற போது உடனடியாக ஒரு லட்ச ரூபாய் கட்டி மீதி தொகையை இரண்டொரு நாளில் கட்டுவதாக எழுதிக்கொடுத்து அவகாசம் கேட்டு சீல் வைக்கும் பணியில் இருந்து தப்பித்தார்.

மேலும் பூமார்க்கெட் உள்பட பல்வேறு இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் அதிரடியாக சீல் வைத்தது. இதனால் நேற்று நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது