தமிழகத்தில் பிரபலமான கால்நடைசந்தைகளில் வேலூர் மாவட்டம் பொய்கை மாட்டுச்சந்தையும் ஒன்று. 

ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் நடைபெறும் இந்த சந்தையில் உள்ளூர் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா, கர்நூல், கர்நாடக மாநிலம் பெங்களூரு ஊரகம், சித்ரதுர்கா, கோலார் மாவட்டங்களில் இருந்தும் கறவை மாடுகள். உழவு மாடுகள், எருமை மாடுகள், காளைகள் என விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதுதவிர பிராய்லர் கோழிகள், நாட்டுக்கோழிகள், ஆடுகள் போன்ற கால்நடைகளும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
கொரோனாவுக்கு பின்னர் கடந்த 2 வாரங்களாக பொய்கை மாட்டுச்சந்தை மிகவும் மந்தமாக நடந்த நிலையில் நேற்று நடந்த சந்தை சூடுபிடித்தது. நேற்று இங்கு அனைத்து வகையிலும் மொத்தம் 1500 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. 

அதேபோல் 500க்கும் மேற்பட்ட ஆடுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளும், பிராய்லர் கோழிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. கறவை மாடுகளை பொறுத்தவரை 75ஆயிரம் வரை விலைபோனது. இவ்வாறு மொத்தம் நேற்று ஒரு நாளில் மட்டும் 80 லட்சம் வரை வர்த்தகம் நடந்தது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.