ராணிப்பேட்டை தாலுகா வளவனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நித்தீஷ். கல்லூரி மாணவரான இவர் வந்தவாசி அருகில் உள்ள தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அருகிலுள்ள ராவணன் பட்டு கிராமத்தை சேர்ந்த தஷ்ணாமூர்த்தி என்பவரும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரியில் ஒன்றாகப் படித்த இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகினர். இதன் அடிப்படையில் நண்பன் தஷ்ணாமூர்த்தி பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ராவணம் பட்டு கிராமத்திற்கு நித்தீஷ் வந்துள்ளார்.

அங்கு நண்பர்களுக்கு விருந்து வைப்பதற்காக நண்பர்கள் குழுவாக சேர்ந்து பிரியாணி தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடி மின்னலுடன் மழை கொட்டத் தொடங்கியுள்ளது. பிரியாணி நனைந்து விடாமல் இருப்பதற்காக நித்தீஷ் தனது நண்பர்களுடன் அதன் மீது தார்பாய் விரித்து பிடித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென நித்தீஷ் மீது இடி மின்னல் தாக்கியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே மாணவன் நித்தீஷ் உயிரிழந்துள்ளார். 

உடனிருந்த அவரது நண்பர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். நண்பன் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சந்தோஷமாக வந்து பிரியாணி தயார் செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அவலூர்பேட்டை பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.