469 policemen appointed to monitor water levels in Ranipettai district SP Deepa Sathyan informed
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 469 போலீசார் நீர் நிலைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மழையால் 200க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிகிறது. 100க்கும் மேற்பட்ட ஏரிகளும் நிரம்பி வருகிறது. பொன்னை. பாலாறு, கொசஸ்தலை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் வேடிக்கை பார்க்கவோ, குளிக்கவோ, செல்பிஎடுக்கவோ செல்கின்றனர். ஆபத்தை உணராமல் இதுபோன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது என்பதை வலியுறுத்தி காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் எஸ்பி தீபாசத்யன் உத்தரவின்பேரில், நீர்நிலைகளில் எச்சரிக்கை பலகைகள் வைக் கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் சரக வெள்ள பாதுகாப்பு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ள காவல்துறை கூடுதல் இயக்குனர் அம்பரிஷ் புஜாரி நேற்று முன்தினம் வாலாஜா பாலாறு அணைக்கட்டு, பொன்னை அணைக்கட்டு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலப்படுத்த உத்தரவிட்டார்.
அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு எண்ணுக்கு தெரிவிக்கலாம்
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபாசத்யன் கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்நிலைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நீர்நிலை பகுதிகளில் பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்க செல்லவேண்டாம். நீரில் இறங்கி குளிக்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம். ஆபத்தை உணர்ந்து செயல்படவேண்டும். எனவே காவல்துறைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மாவட்டத்தில் நீர்நிலைகளை கண்காணிக்க 326 அதிகாரிகள் மற்றும் போலீசார், 85 நீந்தும் தேர்ச்சி பெற்ற தன்னார்வலர்கள், பேரிடர் பயிற்சி முடித்த 58 மீட்பு படை காவலர்கள் என மொத்தம் 469 பேர் நியமிக் கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர உதவிக்கு கட்டுப்பாட்டு அறை எண் 04172 271100, செல்போன் எண் 9884098100 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
இரவுநேர ரோந்தில் எஸ்பி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் இரவு நேர ரோந்து பணியில் எஸ்பி தீபாசத்யன் ஈடுபட்டார். அப்போது அரக்கோணம் அடுத்த அரிகில பாடி பகுதியில் செல்லும்போது சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அவர் உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தினார். அதேபோல் அம்முண்டி பகுதியில் ரோந்து சென்றபோது மின் கம்பம் உடைந்து ஆபத்தான நிலையில் சாலையில் இருந்தது. அவரது உத்தரவின்பேரில் உடனே அந்த மின்கம்பம் அகற்றப்பட்டது.