ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கரிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி(55), விவசாயி. இவர் சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவந்தார். இவரது மருமகன் சுபாஷ் (34), சென்னையில் உள்ள தனியார் தொழிற்ச் சாலையில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், மணி மற்றும் சுபாஷ் ஆகியோர் நேற்று விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றபோது மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டது. அதனை சரி செய்ய மணி கிணற்றுக்குள் இறங்கினார். மின் மோட்டாரை பழுது செய்யும் போது திடீரென்று மணி மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுபாஷ் கிணற்றில் இறங்கி மணியை காப்பாற்ற முயன்றார்.அப்போது சுபாஷும் மயங்கி விழுந்தார்.நீண்ட நேரமாகியும், வயலுக்கு சென்ற மணி. சுபாஷ் ஆகியோர் வீடுதிரும்பாததால் அதிர்ச்சி அடைந்த சுபாஷின் மனைவி நிர்மலா(24) உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தபோது மணி, சுபாஷ் ஆகியோர் சடலமாக கிடந்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவேரிப் பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், காவேரிப்பாக்கம் போலீ சார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தந்தை மற்றும் கணவனை இழந்த நிர்மலா ஊர் பொதுமக்களுடன் நேற்று ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கணவன் மற்றும் தந்தையை இழந்த நிர்மலாவிற்கு உதவும் வகையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க முறையிட்டனர். அவரது கோரிக்கையை ஏற்ற கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நிர்மாலாவிடம் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது தான் பட்டப்படிப்பு மற்றும் தட்டச்சு முடித்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து விரைவில் இ-சேவை மையம் உட்பட ஏதேனும் ஒரு இடத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.