ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப் பிக்கலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:


சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு கடந்த 1995ம் ஆண்டு முதல் தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது. ₹ 1 லட்சம் விருது தொகை. ஒரு சவரன் தங்கப்பதக்கம் ஆகியவை வழங்கப்படுகிறது. விருதாளர்கள் தமிழக முதல்வரால் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி 2021ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருதுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், சமூக நிதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதுதொடர்பான சாதனைகள் ஆகிய தகுதிகளை உடையவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் இம்மாதம் 30ம் தேதிக்குள் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.