ஆற்காடு பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பாராட்டினார்.


ஆற்காட்டிற்கு வேலூர், ஆரணி, திருவண்ணாமலை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து 70 அடி சாலை வழியாக செல்கின்றன. லாரிகள் உள்ளிட்ட மற்ற அனைத்து வாகனங்களும் அண்ணாசாலை வழியாக சென்று பைபாஸ் சாலை சந்திப்பு வழியாக பாலாறு புதிய பாலம் மீது செல்கின்றன. இந்நிலையில் ஆற்காடு அண்ணாசாலை, பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் சமீபத்தில் பெய்த கன மழையால் சாலை சேதமடைந்து ராட்சத பள்ளம் ஏற்பட்டது.

இந்த பள்ளத்தில் மழை நீர் தேங்கி உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல், வேகமாக வந்து திரும் பும்போது பள்ளத்தில் விழுந்து அடிபடும் அபாயம் ஏற்பட்டது.

இதைகண்ட அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள், வெங்கடேஷ், வினோத், பாஸ்கர் ஆகியோர் செங்கல் மற்றும் கற்களையும் கொண்டு வந்து பள்ளத்தில் போட்டு நிரப்பும் பணியில் நேற்றுமுன்தினம் மாலைஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கலெக்டர் பாஸ்கரபாண்டியன், காரை நிறுத்தி கீழே இறங்கி சென்று பார்வையிட்டார்.

பின்னர், அவர்களை பாராட்டினார். அந்தப் பள்ளத்தை மூடி சாலையை செப்பனிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.