வேலுார்: வாணியம்பாடி முதல் காவேரிப்பாக்கம் வரை கனமழையால், பாலாற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தினால், பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில் இன்று காலை 6:00 மணி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வாணியம்பாடி முதல் காவேரிப்பாக்கம் வரை பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குடியாத்தம் மோர்த்தானா, பொன்னை, வாலாஜா அணைக்கட்டுக்கள், ஏராளமான ஏரிகள் நிரம்பி வழிகிறது. வேலுார் மாவட்டம், விரிஞ்சிபுரம் பாலாற்று தரைப்பாலம் மீண்டும் மூழ்கி போக்குவரத்து தடைபட்டது. ஒடுக்கத்துார்- பாக்கம் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு உடைந்து விழுந்தது. வேலுாரில், சேண்பாக்கம், திடீர்நகர், பாலாஜிநகர், கன்சால்பேட்டை, குமரப்ப நகர், சத்துவாச்சாரி, காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
வேலுார் கிரீன் சர்க்கிள் பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வண்டறந்தாங்கல் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி அருகிலுள்ள வீடுகளுக்கு தண்ணீர் புகுந்தது.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே வெங்கட சமுத்திரத்திரத்தில் 210 ஏக்கர் பரப்பு கொண்ட பெரிய ஏரியும், 120 ஏக்கர் பரப்பு கொண்ட சிறிய ஏரியும் ஒரே நேரம் நிரம்பி உபரி நீர் வெளியேறியதால், 1,000 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா கால்வாய்களை அகலப்படுத்தி தண்ணீரை பாலாற்றில் திருப்பி விடும் பணிகளை செய்து வருகிறார்.
ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை அணைக்கட்டு நிரம்பி வழிவதை கைத்தறி துறை அமைச்சர் காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர்.