How to get Heavy rain, storm 'alert' on your mobile immediately

கனமழை, புயல் உள்ளிட்ட கால நிலை மாற்றத்தின் வானிலை நிகழ்வுகள் குறித்த முன்னெச்சரிக்கைகளை, உலகளவில் ஐநா.,வின் உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization) தெரிவித்து வருகிறது.

அதேபோல் நமது நாட்டில் இந்திய வானிலை ஆய்வு மையமும், தமிழக அளவில் சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இது தென்னிந்தியாவின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் இலட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் வானிலை நிகழ்வுகளை கவனித்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல், அதனால் ஏற்படும் கனமழை உள்ளிட்ட எச்சரிக்கைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. மழை நிலவரங்களை மிதமான, கன, மிக, அதி கனமழை அதன் தன்மைக்கேற்ப பிரித்து பொதுமக்களுக்கு தெரிவித்து வருகிறது.

கடந்த 19ம் நூற்றாண்டு வரையில் புயல், மழை உள்ளிட்ட வானிலை எச்சரிக்கைகளை அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி மற்றும் ரேடியா மூலம் மட்டுமே பொதுமக்கள் அறிந்து வந்தனர். அப்போதைய காலகட்டத்தில் ஒரு சிலர் வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சி, ரேடியோ இருந்தது. அதேபோல் தொலைக்காட்சி, ரேடியோக்களில் செய்தியின் வாயிலாக குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கூற முடியும். இதனால் உடனுக்குடன் வானிலை எச்சரிக்கைகள் பொதுமக்களை சென்றடையவில்லை.

இதற்கு உதாரணமாக கடந்த 2004ம் ஆண்டு சுனாமி கோரதாண்டவமே நினைவுக்கு வருகிறது. ஏனென்றால், அப்போது வானிலை முன்னெச்சரிக்கைகள் உடனுக்குடன் பொதுமக்களை சென்றடையாததே இதற்கு காரணம். அதேபோல் தொழில்நுட்பமும் ஒரு காரணமாக கூறப்பட்டது.

அதற்குப்பின்பு தான் சுனாமி அலைகள் ஏற்பட்டவுடன் செயற்கைக்கோள் மூலம் உடனுக்குடன் பூமிக்கு தகவல் அனுப்பும் மிதவை கருவிகளை கடலில் பொருத்த ஆரம்பித்தனர். மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தற்போது இணையதளம், சமூக வலைதளம் உள்ளிட்ட பல்வேறு முறைகளில் பொதுமக்கள் தங்களின் மொபைல் போனிலேயே வானிலை நிலவரங்களை அறியவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையதளமான http://imdchennai.gov.in/ என்ற முகவரியிலும், சமூக வலைத்தளத்திலும் Tamilnadu Vaanilai(தமிழ்நாடு வானிலை) @ChennaiRmc என்ற டுவிட்டர் பக்கத்திலும் அவ்வப்போது முன்னெச்சரிக்கைகளை தெரிவித்து வருகிறது.

இதேபோல், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (TN SDMA) @tnsdma என்ற டுவிட்டர் பக்கத்திலும் மணிக்கு மணி மழை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், அணைகளின் நீர்மட்டம், வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிவித்து வருகிறது.

இதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு வெதர்மேன், சென்னை ரெயின்ஸ் ஆகிய வானிலை ஆய்வாளர்கள் உள்ளிட்ட அந்தந்த மாவட்டங்களின் பெயரிலும் டுவிட்டர் பக்கங்களில் மழை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.