வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ததை தமிழக அரசு மேல்முறையீடு செய்து பெற்று தர வேண்டும் என்று பா.ம.க. சார்பில் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரி பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அங்கு வந்த ஒருவர் கூட்டத்தினர் மீது கல்வீசி அங்கு குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார். அவர் வீசிய கற்கள் அரசு பஸ்சின் கண்ணாடியில் பட்டு கண்ணாடி உடைந்தது. 

இதுகுறித்து பஸ் டிரைவர் ராஜேந்திரன் (வயது 43) பொதட்டூர் பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தார். பஸ் கண்ணாடியை கற்களை வீசி உடைத்தவர் பள்ளிப்பட்டு தாலுகா கோணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (வயது 42) என்பது தெரியவந்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி கோணசமுத்திரம் கிராமத்திற்கு சென்று அங்கு பதுங்கியிருந்த பாண்டியனை கைது செய்தார்.

மேலும் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை அடுத்த செல்லாத்தூர் கிராமம் அருகே வந்த அரசு பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டது.