பொன்னையாற்றில் பொங்கிப்பாய்ந்த பெரு வெள்ளம் தரைப்பாலத்துக்கு மேலே 4 அடி உயரத்துக்கு சென்றதால் இரண்டு நாட்களாக போக் குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பாலத்தின் ஒருபகுதி கீழே இறங்கிய தால் நேற்று முதல் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டதால் பொன்னை மக்கள் மட்டு மின்றி 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

வேலுார் மாவட்டம் பொன்னை கிராமம் தமிழக-ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது. பொன்னையாற்றில் கடந்த ஆண்டு நவம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாலத்தின் தூண் ஒன்று அரித்துச் செல்லப்பட்டு சீரமைக்க 3 மாதங்களுக்கு மேல் ஆனது.

கடந்த 6 மாதங்களாக ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் சென்ற நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் சித்துார் பகுதியில் கன மழை கொட்டியது. மேலும் பொன்னை பகுதியிலும் கனமழை பெய்தது. இந்நிலையில் கடந்த வெள்ளியன்று இரவு கலவகுண்டா அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 
அணை நீர், பொன்னை பெரிய ஏரி உபரிநீர் என பொன்னையாற்றில் வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்தது. பொன்னையாற்றில் கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு ஆகும். இரவு நேரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொன்னை தரைப்பாலம் மேலே 4 அடி அளவு தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. இதனால் ஆற்றின் இருகரைகளையும் தாண்டி தண்ணீர் சென்றதுடன் பொன்னை காந்தி ரோட்டில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியை சந்தித்தனர். மேலும் பொன்னை பொன்னியம்மன் கோயில் வளாகத்தையும் வெள்ளநீர் சூழ்ந்தது.

தரைப்பாலத்தின் மேலே ஆர்ப்பரித்த வெள்ளம் நேற்று முன்தினம் மாலைதான் குறைந்தது. 2 நாட்களாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை பாலத்துக்கு கீழே தண்ணீர் சென்றதால் பாலத்தில் நடந்துசெல்ல மட்டும் நேற்று பகல் அனுமதிக்கப்பட்டனர். அப்போதுதான் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. பாலத்தின் ஒரு கண் அரை அடி அப்படியே இறங்கியிருந்தது. 

இதையடுத்து நேற்று மாலை பாலத்தின் இருபகுதியிலும் மண்ணை கொட்டி தடை ஏற்படுத்தப்பட்டது. இதேபோல் பொன்னை அணைக்கட்டு தடுப்புச்சுவர் மேலே வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதுடன் மதகுகளின் ஷட்டர்கள் மூடியிருந்ததால் பிரதான கால்வாய் வழியாக அதிக அளவு வெள்ளம் சென்றதால் கால்வாய்களின் தடுப்புச் சுவர்கள் சேத மடைந்தன. இதேபோல் மேல்பாடி தரைப்பாலம் முழுவதும் சேதமடைந்ததுடன் ஒரு பகுதி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இப்பகுதியிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் வேலுார் மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர் நந்தகுமார் ஆகியோர் மேல்பாடி, அணைக்கட்டு பகுதியை நேற்று காலை பார்வையிட்டனர். தொடர்ந்து பொன்னை தரைப்பாலத்தில் நேரில் வந்து ஆய்வு செய்து உடைந்த பகுதி சீரமைப்பது குறித்து பொதுப்பணித்துறை வேலுார் மாவட்ட கோட்ட கலெக்டர் பொறியாளர் சரவணனிடம் கேட்டறிந்தார். அப்போது சரவணன் உடைந்த பகுதியை உடனே சீரமைக்க நிதி ஒதுக்கி தரும்படி கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பொன்னை ஆற்றின் மேற்கு கரைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் அன்றாட தேவைகள் மற்றும் வங்கி, போஸ்ட் ஆபிஸ், ஆஸ்பத்திரி என அனைத்துக்கும் பொன்னைக்குத்தான் வரவேண்டும். இந்நிலையில் பொன்னை பாலம் சீரமைப்பதில் மெத்தனப் போக் காக இருந்தால் பொன்னை மக்கள் மட்டுமின்றி 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும் பெரிதும் பாதிப்படைவார்கள். கடந்த 2 நாட்களாக பொன்னை ஊருக்குள் எந்த பஸ்சும் வரவில்லை. !

எனவே கலெக்டர் மற்றும் தொகுதி அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் துரித நடவடிக்கை எடுத்து பாலத்தின் பழுதான பகுதியை சீரமைப்பது அல்லது தற்காலிகமாக மக்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய மாற்று போக்கு வரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொன்னை மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.