மின்கம்பத்தில் அல்லது ஸ்டே கம்பியில் கோழி, ஆடு, மாடு போன்ற வீட்டு விலங் கினங்களை கட்ட வேண்டாம் என்று மின் வாரிய அதிகாரி விழிப் புணர்வு நோட்டீஸ் வழங்கினார்.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அரக்கோணம் உள்ளிட்ட பல ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு மின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ் அரக்கோணம் எஸ்ஆர் கேட்டில் மின்வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

அரக்கோணம் உதவி செயற்பொறியாளர் (நகரம்) புனிதா தலைமை வகித்தார். இளநிலை பொறியாளர் (கிழக்கு) பெரியசாமி, போர்மேன்கள் குமரவேல், ஜெகதீஸ்வரன்முன்னிலை வகித்தனர். வணிக ஆய்வாளர் உமாபதி வரவேற்றார். பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி உதவி செயற் பொறியாளர் புனிதா பேசியதாவது: மழைக்காலங்களில் ஈரமான துணிகளை மின் வயர்களில், கம்பிகளில் காயவைப்பதற்காக போடுவதால் உயிர் இழப்பு ஏற்படும்.

மின்கம்பங்கள், ஸ்டே கம்பிகள் மற்றும் மின் மாற்றி வேலி அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும். மின்கம்பங்களை பந்தல்களாகவும் அல்லது அவற்றின் மீது விளம்பர பலகையை கட்டக்கூடாது. மின்கம்பத்தில் அல்லது ஸ்டே கம்பியில் கோழி, ஆடு,மாடு போன்ற வீட்டு விலங்கினங்களை கட்டு வதை தவிர்க்க வேண்டும்.

எந்த இடத்திலாவது மின்கம்பி அறுந்து விழுந்திருப்பதை கண்டால் உடனடியாக அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தர வேண்டும். டிரான்ஸ்பார்மர், துணைமின்நிலையங்களை சுற்றி போடப்பட்டுள்ள வேலியில் அருகில் சிறுநீர் கழிக்கக்கூடாது.

'மின்வேலி அமைத்தால் உயிர் இழப்பு ஏற்படும் என்பதால் அதனை கட்டாயம் செய்யக்கூடாது. அதற்கு குற்றவியல் தண்டனை வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.