கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற அறிவிப்பு விரைவில் வரும் என்கிறது தலைமை செயலக வட்டாரம்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா முதல் அலையை விட 2வது பெரும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் கொரோனா பெருமளவு குறைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வாரம் இரண்டு முறை தடுப்பூசி முகாம்கள் நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்று தமிழக பொதுசுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த 19ம் தேதி ஆணை வெளியிடப்பட்டது. அதில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா என பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், சந்தைகள் மற்றும் தெருக்களில் உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

மக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகள் உறுதி செய்வது அவசியம். இதனைப் போலவே திரையரங்குகள், இதர பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் உறுதி செய்யப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரிரு நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.