ஆற்காடு நகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக வேப்பூர் பாலாற்றில் தலைமை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இப்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலாற்றில் அமைக்கப்பட்ட பைப் லைன்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆற்காடு நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜெயராம ராஜா வெளியிட்டுள்ள அறிவிப்பு : வடகிழக்கு பருவ மழை யால் பாலாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வேப்பூர் தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள பைப் லைன்கள் மற்றும் கேபிள்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் ஆற்காடு நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன் படுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.