🌺 1895ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி ஆட்டோமொபைலின் முதலாவது அமெரிக்க காப்புரிமத்தை ஜார்ஜ் செல்டன் பெற்றார்.


முக்கிய தினம் :-


உலக சுனாமி விழிப்புணர்வு தினம்

🌻 சுனாமி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 5ம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாகக் கொண்டாட, ஐக்கிய நாடுகள் அவையில் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


பிறந்த நாள் :-


சித்தரஞ்சன் தாஸ்

🌟 தேசபந்து என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ், 1870ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி வங்கதேசத் தலைநகர் தாகா அருகே விக்ரம்பூரில் பிறந்தார்.

🌟 தீவிர அரசியலில் ஈடுபட்டு, இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியத் தலைவராக உயர்ந்தார். இவரை தன் அரசியல் குருவாகப் போற்றினார் சுபாஷ் சந்திரபோஸ்.

🌟 ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் கைவிட்டதால் அதிருப்தி அடைந்து, 1922ஆம் ஆண்டு சுயராஜ்ஜியக் கட்சியைத் தொடங்கினார்.

🌟 1923ஆம் ஆண்டு நாடாளுமன்ற கவுன்சில் உறுப்பினரானார். 1924ஆம் ஆண்டு நடந்த கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றி பெற்று, சித்தரஞ்சன் தாஸ் மேயரானார். கிராமப் பஞ்சாயத்து, கிராம சுயாட்சி ஆகியவற்றை அப்போதே தனது ஐந்து அம்ச திட்டத்தில் கொண்டு வந்தவர் இவர் தான்.

🌟 சாகர் சங்கீத் கவிதைத் தொகுப்பு, நாராயண்மாலா, கிஷோர் கிஷோரி, அந்தர்யாமி உள்ளிட்ட புத்தகங்கள் மற்றும் இவர் திலகர் குறித்து பல நூல்கள் எழுதியுள்ளார். தன் ஈகை குணத்தால் ஏழையான இந்த வள்ளல், தன் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள நிலங்களையும் ஆதரவற்ற பெண்களின் நலனுக்காக எழுதி வைத்தார். இவர் தனது 54-வது வயதில் (1925) மறைந்தார்.


பனாரசி தாஸ் குப்தா

🌹 சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமான பனாரசி தாஸ் குப்தா 1917ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி ஹரியானாவில் உள்ள ஜீந்த் மாவட்டத்தில், பிவானி என்ற இடத்தில் பிறந்தார்.

🌹 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டதால் 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா விடுதலை அடைந்த பிறகு ஜீந்த் பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய இவர், சர்தார் வல்லபாய் படேலுடன் இணைந்து அதை சாதித்தார்.

🌹 1968ஆம் ஆண்டு நடைபெற்ற பிவானி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். 1972ஆம் ஆண்டு மீண்டும் வென்று சட்டமன்றத் தலைவரானார். மின்சாரம், பாசனம், விவசாயம், சுகாதாரம் ஆகிய பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார். 1975ஆம் ஆண்டு ஹரியானா முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆட்சிக்காலத்தில் ஹரியானா மாநிலம் பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டது.

🌹 இவர் பாபுஜி என்று அன்போடு அழைக்கப்பட்டார். நாட்டு முன்னேற்றத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் கருத்தில் கொண்டே செயல்பட்டவர். சமூக மேம்பாடு, கல்வி, இலக்கியம், பத்திரிக்கைத் துறை ஆகிய பல களங்களில் முனைப்புடன் பாடுபட்ட பனாரசி தாஸ் குப்தா தன்னுடைய 89வது வயதில் (2007) மறைந்தார்.