ஆற்காடு அருகே லாரி மீது அரசு பஸ் மோதியதில் டிரைவர் உட்பட 3 பேர் படுகாயமும் 6 பேர் காயமடைந்தனர்.
சென்னை கூடுவாஞ்சேரி அருகே நந்திவரம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் குமார் (வயது 59). அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று வேலூரில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு தடம் எண் 155 என்ற அரசு பஸ்சை ஓட்டி வந்தார்.
சென்னையைச் சேர்ந்த கேசவன் கண்டக்டராக இருந்தார். ஆற்காடு அடுத்த வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் காலை 11 மணிக்கு வந்தபோது அங்குள்ள வளைவில் திரும்பி முன்னால் சென்ற மண் லாரியை அரசு பஸ் முந்த முயன்றது.
அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்கம் அரசு பஸ் மோதி சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியில் வேகமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து டிரைவர் குமார் படுகாயமடைந்தார். மேலும் பயணிகள் சீதா(43), சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த கணேசன் (59) ஆகியோர் படுகாயமும். ஆம்பூர் வெங்கட சமுத்திரத்தைச் சேர்ந்த தேவேந்திரன் (41), மாதனூரைச் சேர்ந்த விசித்திரா (25), நாட்டேரியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (49) வேலூர் அடுத்த அரியூர் பழவேரியைச் சேர்ந்த பிரேம்குமார் (24) ஆகிேயார் லேசான காயமும் அடைந்தனர்.
தகவலின்பேரில், போலீசார் சென்று அனைவரையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.