100 நாள் வேலை திட்டத்தில் பணிகளை விரைவாக முடிக்கும் பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்க வேண்டும் என கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினார்.
ஆற்காடு ஒன்றியம் லாடவரம் ஊராட்சியில் 30 ஏக்கர் பரப்பளவு மேய்க்கால் நிலம் புறம்போக்கு நிலத்தில் கால் நடைதுறையின் சார்பில் கால்நடை தீவனப்பயிர் வளர்த்து பராமரிக்கும் பணி மற்றும் பலன் தரும் மரச்செடிகள் நட்டு பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தற்போது பண்ணை குட்டை அமைக்கும் பணியில் இடத்தின் பரப்பளவை அதிகப்படுத்திடவும், ஏற்கனவே வெட்டப்பட்ட இடத்திலிருந்து அதிகப்படுத்தி கரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட பணிகளை ராணிப்பேட்டை கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பதிவேடுகளை பார்வையிட்டு எத்தனை பேர் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என்று கேட்டறிந்தார்.

அப்போது 51 நபர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதை கண்டறிந்து அந்த பணியாளர்களிடம் எவ்வளவு கூலி வழங்கப்படுகிறது என்று கேட்டார். பணியாளர்கள் விரைவாக பணிகளை செய்கிறார்களா என்பதையும், வழங்கப்படும் ஊதியத்திற்கு ஏற்றவாறு பணிகளை செய்வதையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கூறி. 100 நாள் வேலை திட்டத்தில் விரைவாக பணிகளை முடிக்கும் பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மழையினால் மண் மூடப்பட்ட செடிகளில் இருந்து மண்ணை அப்புறப்படுத்தி செடிகளை பராமரிக்கும் பணியை பார் வையிட்டார். அப்போது 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட மேய்க்கால் புறம்போக்கு இடத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் கால்நடை தீவனங்கள் மற்றும் மரச் செடிகள் வளர்க்கப்படுகிறது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 100 நாள் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். 1200 செடிகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு இதுவரை 300 செடிகள் நடப்பட்டுள்ளன. அதே போல் இந்த இடத்தின் எல்லையை சுற்றியும் 1200 பனை விதைகள் நடப்பட்டுள்ளது. இவற்றை பராமரிக்க பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று அதிகாரிகள் கலெக்டரிடம் தெரிவித்தனர். ஆய்வின்போது ஆற்காடு பிடிஓ செந்தாமரை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உட்படபலர் உடனிருந்தனர்.