வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல தனியார் நகைக் கடையான ஜோஸ் ஆலுக்காஸில் கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு சுவற்றை துளையிட்ட நபர் உள்ளே புகுந்து சுமார் 15 கிலோ தங்க நகைகள் 500 கிராம் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 8 தனிப்படைகள் அமைத்து கொள்ளையனை தேடினர்.

கொள்ளையடிக்கப்பட்ட போது கடையில் உள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவான உருவத்தை கொண்டும், அங்கு கிடைக்கபெற்ற தடையங்கள், செல்போன் சிக்னலைக் கொண்டும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில், பள்ளிகொண்டாவை அடுத்த குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த டீக்காராமன் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 
விசாரணையில் டீக்காராமன் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் காவல்துறையினர் துருவித் துருவி விசாரணை நடத்தியதில், டீக்காராமன் நகைகளை மண்ணில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நகைக்கடைக்கு அருகில் உள்ள இடம் உள்ளிட்ட பல இடங்களில் காவல்துறையினர் கடப்பாரை மற்றும் மண்வெட்டி மூலம் தரையை தோண்டி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மேலும், கொள்ளையன் தங்கி இருந்த ஒடுக்கத்தூர் பகுதியிலும் வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணா தலைமையிலான குழுவினர் சோதனையிட்டு வந்தனர். உத்தரகாவேரி ஆற்றின் கரையோரம் உள்ள சுடுகாட்டில் நகைகள் புதைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, காவல்துறையினர் அங்கு சென்று தேடுதல் நடத்தினர். 
அங்கிருந்தத சுடுகாட்டில் ஒரு இடத்தில் தோண்டிப் பார்த்தபோது மண்ணில் உருக்கிய நிலையில் நகைகள் புதைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மீட்ட காவல்துறையின் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.