கரணம் தப்பினால் மரணம்… 


ராணிப்பேட்டை மாவட்டம் வேலம் பகுதியில் மழை வெள்ளத்தில் சேதமடைந்த தரைப்பாலம் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வேலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரியில் இருந்து மருதாளம், கோவிந்தச்சேரி, பானவரம், காவேரிப்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு கால்வாய் மூலம் நீர் செல்கிறது. இந்த கால்வாயின் குறுக்கே, திருத்தணி - சோளிங்கர் வேலம் அம்மூர் வழியாக நெடுஞ்சாலை உள்ளது.

மழை வெள்ளத்தால் தரைப்பாலம் சேதம்; போக்குவரத்து பாதிப்பு!


ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகம், அம்மூர் ரயில் நிலையம் உள்ளிட்ட பிரதான தேவைக்காக பயணம் செய்பவர்கள் இந்தச் சாலையைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் ஒருபகுதியாக புதூர் கிராமத்தின் வழியாக மறுதாளம் ஏரிக்கு செல்லும் கால்வாயின் குறுக்கே உள்ள நெடுஞ்சாலை தரைப்பாலம் சேதமடைந்தது. பாதுகாப்புக்காக போடப்பட்ட கம்பி வேலிகள் அடித்துச்செல்லப்பட்டதால் ஆபத்தான நிலை உள்ளது.

தரைப்பாலம் எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளபோதும், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் முன்பு நெடுஞ்சாலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.