ராணிப்பேட்டையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் இளைஞருக்கு சிகிச்சை அளிக்க, முதலமைச்சர் காப்பீடு அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த நபருக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை நாளில் கூட பணியாளர்களை வரவைத்து காப்பீட்டு அட்டை வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

புற்றுநோயால் உயிருக்கு போராடும் 22 வயது இளைஞர்


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த படியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பரமசிவம். இவரது 22 வயது மகனான ஜெகதீசன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையை, தொடர முதலமைச்சர் காப்பீடு திட்ட அடையாள அட்டை தேவைப்பட்டதால் நேற்றூ ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தார். இந்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், கிறிஸ்துமஸ் விடுமுறை நாளிலும் காப்பீடு திட்ட பணியாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு அலுவலகத்திற்கு வரவழைத்தார்.

கிறிஸ்துமஸ் விடுமுறை நாளில் கூட பணியாற்றிய ராணிப்பேட்டை ஆட்சியர்


ஆட்சியரின் அழைப்பை ஏற்று உடனடியாக அலுவகம் வந்த மருத்துவ காப்பீடு திட்ட அலுவலர்கள் பரமசிவத்திற்கு காப்பீடு அடையாள அட்டை தயார் செய்து உடனடியாக வழங்கினர். 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகனின் உயிரை காப்பாற்ற முதலமைச்சரின் காப்பீடு திட்ட அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த தந்தையின் கோரிக்கையை ஏற்று கிறிஸ்துமஸ் விடுமுறை நாளிலும் பணியாளர்களை வரவழைத்து உடனடியாக காப்பீடு திட்ட அட்டை வழங்கிய ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மனிதாபிமான மிக்க செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.