ராணிப்பேட்டை மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்றப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை


ராணிப்பேட்டை மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்றப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

விழிப்புணர்வு பிரசாரம்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், அதற்கான மாற்றுப் பொருட்கள், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகன பிரசார‌ தொடக்கம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது :-


சென்னை ஐகோர்ட்டு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல் படுத்தவும், மீறுபவர்களுக்கு எதிராக ஆரம்பநிலையிலேயே நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு உத்தரவு வழங்கி வருகின்றன. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆய்வுகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து மூடுதல் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக


தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலை வளாகம், தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தங்கள் பகுதிகளில் விழிப்புணர்வு கருத்துக்களை பொது மக்களிடம் கொண்டு சேர்த்து, தமிழக அரசு தெரிவித்துள்ளபடி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், பயன்படுத்துபவர்கள் மீதும் அபராதம் வசூல் செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.