சோளிங்கர் அருகே சென்ட்ரிங் ஷீட் விழுந்து வடமாநில தொழிலாளி பலியானார். மற்றொரு தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க ராணிப்பேட்டை மாவட்டம், திருப்பாற்கடல் பாலாற்றில் இருந்து, கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் சப்ளை செய்யப்பட உள்ளது. இதற்காக 115 கோடி ஒதுக்கீடு செய்து பைப்லைன். குடிநீர் டேங்க் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அதன்படி கடந்த சில மாதங்களாக சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென சென்ட்ரிங் இரும்பு ஷீட் சரிந்து கம்டாராம்(40),கிராண்டிபஸ்வான்(30) ஆகியோர் மீது விழுந்தது. இதில் கம்டாராம் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும். படுகாயமடைந்த கிராண்டி பஸ்வானை சகதொழிலாளர்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.