ராணிப்பேட்டை மாந்தாங்கலில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் ஆற்காடு அடுத்த கே.வேலுார், ராந்தம், விசிமோட்டூர், வாலாஜா ஆகிய பகுதிகளிலிருந்து தொழிலாளர்கள் வந்து வேலை செய்கிறார்கள். கே.வேலுார் ஆனந்தன் மகன் முரளி(38), என்பவர் தனக்கு சொந்தமான வேனில் இவர்களை கம்பெனிக்கு ஏற்றிவந்து வேலை முடிந்ததும் மீண்டும் கொண்டு போய் விடுவது வழக்கம். இதற்கான கான்ட்ராக்ட்டை இவர் கம்பெனியில் எடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அவர் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ராணிப்பேட்டை வந்தார். வி.சி.மோட்டூர் சிக்னல் தாண்டி எம்பிடி சாலையில் வேன் நுழைந்தபோது எதிர்பாராத விதமாக வேனின் பின்பக்க டயர் வெடித்ததாக கூறப்படுகிறது.

இதில் வேன் தனது கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது எதிர் திசையில் வந்த டிப்பர் லாரி வேனின் பக்கவாட்டில் மோதிவிட்டது. இதில் வேனை ஓட்டி வந்த முரளி, பயணம் செய்த ஷூ கம்பெனி தொழிலாளர்கள் அரிகரன் (17), அனிதா (35), அஜய்(17), பிரேம்குமார் (35), சரோஜா (47), முருகன் (52) நித்யா(17), விஸ்ராபானு(19), பூங்குயில், பிரேம்குமார்(28), உஷா ராணி(21), ஜெயந்தி (18), ஜினாபானு(37), விக்ரம்(21) ஆகிய 15 பேர் காயமடைந்தனர்.

அப்போது அவ்வழியே வந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். இந்த விபத்து குறித்து ராணிப்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் இருசப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.