ராணிப்பேட்டை மாவட்டத் தில் கொரோனா விதி மீறியதாக ஒரே நாளில் 289 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் ஆகியவற்றில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.

இது தவிர ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்கும் வகையில், மாஸ்க் அணியாமல் செல்லும் நபர்களுக்கு 500 அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலானது. இதையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் எஸ்பி தீபாசத்யன் உத்தரவின்பேரில் போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றிக்கொண்டிருந்த நபர்களை எச்சரிக்கை செய்து, அபராதம் விதித்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 289 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.