அரக்கோணத்தில் இருந்து தினமும் காலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு விரைவு மின்சார ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயிலே அலுவலகம் மற்றும் தனியார் தொழிலாளர்கள், கட்டட வேலைக்கு செல்பவர்கள், கல்லுாரி மாணவர்கள் குறித்த நேரத்துக்கு செல்லக் கூடியதாகவும், விரைவு மின்சார ரயிலாகவும் உள்ளது. இந்த ரயிலில் பெட்டிகள் 8 மட்டுமே இணைக்கப் பட்டுள்ளது.
பொதுவாக மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகள் கொண்டதாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு நேரிலும், கடிதம் மற்றும் சமூக வலைதளங்களிலும் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் சென்னை - தாம்பரம், சென்னை -செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களே 12 பெட்டிகளாக உள்ளது.

திருத்தணி மற்றும் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் திருவள்ளூர் வழியாகவே செல்கிறது. ரயில் திருவள்ளூர் செல்வதற்கு முன்பாகவே கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் பயணிகள் கடும் கூட்ட நெரிசலிலும், படிக்கட்டில் தொங்கியபடியும் சாகசபயணம் செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நெரிசலில் சல்ல முடியாத பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

எனவே 12 பெட்டிகள் கொண்டரயில்கள் இயக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கும் போது சில நாட்களுக்கு மட்டும் இயக்குகின்றனர்.

அதன்பின்னர் அதே ரயில் தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்துக்கு வழக்கம் போல் அனுப்பி வைக்கப் படுகிறது.

பீக்அவர்ஸ் நேரங்களிலாவது மட்டும் 12 பெட்டிகளுடன் கூடிய மின்சார ரயிலை அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு இயக்க வேண்டும் என்று பயணிகள் மீண்டும், மீண்டும் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர். பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷன்கள் 12 பெட்டிகள் கொண்ட ரயில் நிற்கும் அளவுக்கு பிளாட் பாரம் நீட்டிப்பு செய்யட்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.