ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 4 மாதம் சம்பளம் தரவில்லை என குற்றச்சாட்டு


ராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கன்னு அடுத்த நவலாக் பகுதியில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் தென்னம் பண்ணை, தோட்டக் கலைப்பண்ணை, எண்ணெய் வித்துப் பண்ணை என மூன்று பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என கூறியும் அதனை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் எனக்கோரி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் வருகை தந்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு கொடுக்க முயன்றனர்.

அரசு தோட்டக்கலை பண்ணையில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இன்று நடைபெறவிருந்த மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட ஆட்சியரை சந்திக்கும் வரை காத்திருப்பு போராட்டம் அறிவித்த தொழிலாளர்கள்.


இதனால் அந்த மனுவை புகார் பெட்டியில் செலுத்திவிட்டு செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேரில் மனு கொடுக்காமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக் கூறி ஒப்பந்த ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கையில் பதாகைகளை ஏந்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நோய் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் இது போன்று ஒப்பந்த ஊழியர்கள் ஒன்றுகூடிய சம்பவம் குறித்து ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் பார்த்தசாரதிக்கு தகவல் அளிக்கப்பட்டது, அதன் பேரில் விரைந்து வந்த ஆய்வாளர் பார்த்தசாரதி அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார், இதனையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.