ராணிப்பேட்டை, சிப்காட் பகுதிகளில் முழு ஊரடங்கால் கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன.


வெறிச்சோடிய சாலை


கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று நடைபெற்ற முழு ஊரடங்கின் போது ராணிப்பேட்டை, சிப்காட் பகுதிகளில் வணிக நிறுவனங்களும், கடைகளும் மூடப்பட்டிருந்தன. வாகனங்கள் செல்லாததால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் கிடந்தது.

ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் உள்ள எம்.பி.டி. சாலை எனப்படும் சென்னை-மும்பை சாலை, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இச்சாலை எப்போதும் வாகன போக்குவரத்தால் பரபரப்பாக காணப்படும்.

நேற்று முழு ஊரடங்கால் அத்தியாவசிய வாகனங்கள் மட்டும் சென்றன. இதனால் இச்சாலை பரபரப்பு இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

தொழிற்சாலைகள்


மேலும் ராணிப்பேட்டை மற்றும் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் தொழிலாளர்கள் நடமாட்டமின்றி சிப்காட் பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.

பெரும்பாலும் ஊரடங்கின் போது மாலை 5 மணி அளவில் கடைகள் சில திறக்கப்படும். ஆனால் நேற்று ஊரடங்கின் போது இரவு வரை கடைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.