வேலூர் அருகே நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அரசு பஸ் கண்டக்டர் பலியானார்.

அரசு பஸ் கண்டக்டர் பலி

வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் வல்லண்டராமம் வசந்த நடை பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் பரந்தாமன் (வயது 33). இவர் கொணவட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் வேலைக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டார்.பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

மேல் மொணவூர் அருகே சென்னை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று நெடுஞ்சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தது. மோட்டார் சைக்கிளில் சென்ற பரந்தாமன் அதை கவனிக்காமல் கன்டெய்னர் லாரியின் பின்னால் மோதினார். மோதிய வேகத்தில் அவர் ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரது உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவம்னைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து பரந்தாமனின் மனைவி கீதா போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.