காதல் திருமணம் செய்து மணமகனுடன் நெமிலி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த மகளை, காவலர்கள் முன் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்றதாக தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி, வன்னியர் தெருவைச் சேர்ந்த ஆனந்தனின் மகள் உதயதர்ஷினி(21). நெமிலியில் பிரபல லுங்கி தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த புதன்கிழமை வீட்டிலிருந்து வங்கிக்குச் செல்வதாக சொல்லிச் சென்ற உதயதர்ஷினி வீடு திரும்பவில்லை.

இதையடுத்து தனது மகளைக் காணவில்லை என ஆனந்தன், நெமிலி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். சனிக்கிழமை உதயதர்ஷினி, அசநெல்லிகுப்பத்தைச் சேர்ந்த தினேஷ்(24) என்பவருடன் நெமிலி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதையறிந்து காவல் நிலையத்துக்கு வந்த ஆனந்தன், மகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் திடீரென கத்தியால் உதய தர்ஷினியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் காயமடைந்த உதயதர்ஷினி வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நெமிலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தனர்.