ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் நிகழ்ச்சியில் கோரிக்கை மனுக்களை பெற்று, பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை, நிலப் பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா. முதியோர் உதவித் தொகை கோரி என 328 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவவர்களிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்க அலுவலர்களுக்கு அமைச்சர் காந்தி உத்தரவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.78,850 மதிப் பிலான பெட்ரோல் ஸ்கூட்டர், 2 பேருக்கு ரூ.1000 முதியோர் ஓய் வூதியத் தொகை பெறுவதற்கான ஆணை, ஒருவருக்கு முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும் அமைச்சர் வழங்கினார்.

இதில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தீபா சத்யன்,மாவட்ட வருவாய் அலுவலர் ப.குமரேஸ்வரன், வருவாய் கோட்டாட்சியர் பூங் கொடி, துணை ஆட்சியர் (கலால்) சத்திய பிரசாத், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணக்குமார் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.