Inauguration of Danhoda Sales Center at Ranipet Farmers Market


ராணிப்பேட்டை மாவட்ட தோட்டக் கலைத்துறை சார்பில், ராணிப்பேட்டை உழவர் சந்தையில் டான்ஹோடா விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறையின் கீழ் இயங்கும் ராணிப்பேட்டை உழவர் சந்தையில் தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் டான்ஹோடா விற்பனை மையம் தொடக்க விழா நேற்று நடந்தது. 

இதில், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை துணை இயக்குனர் சீனிராஜ்தலைமை தாங்கி பேசியதாவது:

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் திறக்கப்பட்டுள்ள டான்ஹோடா விற்பனை மையத்தின் மூலம் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தோட்டக்கலை பண்ணைகளில் தயாரிக்கும் ஊறுகாய்கள், கிராம்பு, மிளகு, தேன், மண்புழு உரம், விதை பொட்டலங்கள் மற்றும் இதர உற்பத்தி பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் தரமாக வழங்கப்பட உள்ளது.

மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுக்கு தேவையான தோட்டக்கலை பயிர்கள் மற்றும் சாகுபடி குறிப்புகள், தொழில் நுட்ப ஆலோசனைகளை இம்மையத்தின் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகள் அதிகமாக உற்பத்தி செய்துள்ள விவசாய பொருட்களை வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை உதவியுடன் விரைவாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பசுபதிராஜ். உதவி அலுவலர்கள் முனியப்பன், சுந்தரி, அன்பரசன், பிரபாகரன், ராணிப்பேட்டை உழவர் சந்தை நிர்வாக அலுவலர் முருகன், உதவி நிர்வாக அலுவலர் மோகன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.