கலவை அருகே காதலிக்க மறுத்த பிளஸ்-1 மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.

The teenager cut the throat of a Plus-1 student who refused to make love near the Arcot, Kalavai

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த சென்ன சமுத்திரம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மார்கண்டன். இவரது மகன் விஜயகுமார். இவர் 6 மாதங்களுக்கு முன்பு பிளஸ்-1 படிக் கும் 16 வயது மாணவியிடம், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இது பற்றி தகவல் அறிந்த மாணவியின் தந்தை, பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் மகளை தங்க வைத்துள்ளார்.

இந்தநிலையில் விஜயகுமார், மாணவியை பார்ப்பதற்காக பனப்பாக்கம் கிராமத்திற்கு இரண்டு முறை சென்றுள்ளார். இதற்கிடையே ஒரு வாரத்திற்கு முன்பு சென்னசமுத்திரம் மோட்டூரில் உள்ள தந்தை வீட்டுக்கு மாணவி வந்துள்ளார். நேற்று மாலை 4.30 மணிக்கு நிலத்துக்கு சென்று மாடுகளை ஓட்டி வர மாணவி சென்றுள்ளார்.

கழுத்து அறுப்பு


அப்போது மறைந்திருந்த விஜயகுமார், அவரிடம் சென்று தன்னை காதலிக்கும்படி கேட்டு, ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதற்கு மறுத்த அவரை விஜயகுமார் கத்தியால் கழுத்தில் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த மாணவி வீட்டுக்கு சென்று தந்தையிடம் கூறியுள்ளார்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் நேரில் சென்று விசாரணை செய்தார். இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், மூர்த்தி, சங்கர், பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை வலை வீசி தேடி வருகின்றனர்.