ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடக்கி வைத்து, புதிய கைத்தறி ஆடை ரகங்களைப் பார்வையிட்ட அமைச்சர் ஆர்.காந்தி, உடன், ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர்.


தமிழகத்தில் இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக ரூ.200 கோடி நிர்ணயிக் கப்பட்டுள்ளதாக கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

ராணிப்பேட்டைமாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி ஆடை ரகங்களின் தீபாவளி 2022 சிறப்பு விற்பனை தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடை பெற்றது. இதில் அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்று, குத்து விளக்கேற்றி முதல் விற்பனையைத் தொடக்கிவைத்தார். பின்னர், இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கைத்தறி ஆடை ரகங்களைப் பார்வையிட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

வாடிக்கையாளர்கள் விரும்பும் ரகங்கள் பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டு, வழங்கும் வகையில் நவீன மயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 155 கோ-ஆப்டெக்ஸ் கடைகள் உள்ளன. தமிழகம் முழுவதும் கோஆப்டெக்ஸ் கடைகளும், 49 கடைகள் பிற மாநிலங்களிலும் உள்ளன. இந்தக் கடைகளை மேம்படுத்த தனியார் நிறுவன ஆலோசனைக் குழுமூலம் நவீனமயமாக்கப்பட்டு, விற்பனை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. 

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் 11 மண்டலங்களுடன், 155 விற்பனை நிலையங்கள் மூலமாக நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி 2022-க்கான சிறப்பு விற்பனை ரூ.150 முதல் ரூ. 200 கோடி அளவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டலத்துக்கு நடப்பாண்டில், ரூ. 16 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய விற்பனை கடைகளுக்கு ரூ. 1.55 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ. 1.26 கோடி விற்பனை நடைபெற்றுள்ளது.

ஆர்கானிக் கைத்தறி ஆடைகள் முதன்முதலாக குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது பெண்களுக்கான ஆர்கானிக் நைட்டிகள் அறிமுகப்படுத்தப் பட்டு, அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.

மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், தமிழக கைத்தறித் துறை இணை இயக்குநர் கி.கிரிராஜன், கோ-ஆப்டெக்ஸ் முதன்மை பொது மேலாளர் ஆலோக்பபேலே, பொது மேலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், மண்டல மேலாளர் ஜெ.நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகர்மன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.