வாலாஜா அருகே உள்ள ஷடாரண்ய தலங்களில் ஒன்றான வன்னிவேடு அகத்தீஸ்வரர் கோயிலில் பூஜை பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்.
பூஜை பொருட்கள் திருட்டு போன வன்னிவேடு அகத்தீஸ்வரர் கோயில்

Pooja items stolen from Vannivedu Agatheeswarar temple


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தில் மிக பழமையான அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. 1500 ஆண்டு பழமையான இக்கோயில் ஷடாரண்ய தலங்களில் முக்கியமானதாக போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரி அன்று தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.
இதேபோல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று சரபேஸ்வரருக்கு ராகுகால பூஜை நடை பெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்கிடையே இந்த கோயிலில் பக்தர்கள் கைங்கரியத்துடன் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூன் 26ம் தேதியன்று அம்மன் சன்னதியிலிருந்து பூஜை பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கோயில் குருக்கள் மனோஜ் பூஜையை முடித்து கோயிலை பூட்டி விட்டு சென்றார்.
மீண்டும் நேற்று புதியதாக கட்டப்பட்ட ராஜகோபுரம் இரும்புக்கதவு மற்றும் பிரதான வாயிற்கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் மூலஸ்தானம் உடைக்கப்பட்டு அங்கிருந்த 5 அடி உயரம் கொண்ட பித்தளை குத்துவிளக்கு, கைமணி, பித்தளை தட்டு, சுவாமிக்கு அலங்காரமாக சாத்தப்படும் பித்தளை நாகம், கவசம் மற்றும் அம்பாள் கவசம். பித்தளை சொம்பு ஆகியவை கொள்ளை போனது.

வெளியே தொங்கவிடப்பட்ட 20 கிலோ எடைகொண்ட பித்தளை மணி, தூங்காவிளக்கு உள்ளிட்ட அனைத்து பூஜை சாமான்களும் கொள்ளைபோனது. கோணியில் வைக்கப்பட்டிருந்த கோலமாவை கீழே கொட்டி அந்த கோணியில் பூஜைபொருட்களை கொண்டுபோனது தெரியவந்தது. இதே பால் சிசிடிவி கேமரா பதிவு செய்யும் ஹார்டுடிஸ்க் ஆகியவை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர். வெளிப்பிரகாரத்தில் உள்ள ஸ்டோர்ரூமில் வைக்கப் பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்து. ஆனால் அதில் எதுவும் பொருட்கள் இல்லை. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் வாலாஜா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நேற்று காலை மினிவேன் ஒன்று கோயில் ராஜகோபுரம் அருகோ நின்று சென்றதாக அருகிலிருந்தவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கோயில் பக்தர்கள் தெரிவிக்கையில், இதுவரை 42 தடவை கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லை என்றாலும் தொடர்ந்து இக்கோயிலை குறிவைத்தும், சிறுபொருட்கள் கூட இல்லாமல் கொள்ளையடித்திருப்பது வேதனையாக உள்ளது என்றனர்.