போர் வீரர்கள் போரின்போது தலைக்கவசம் அணிவது அக்கால வழக்கம். இன்றைக்கு இருசக்கர வாகன பயணம் என்பதே போருக்கு செல்வது போல்தான் இருக்கிறது. அதனால், தலைக்கவசம் மிக அவசியம். 

வாகன ஓட்டிகளுக்கான தலைக்கவசம்(ஹெல்மெட்) கண்டுபிடிக்கப் பட்டு சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. 1914-லேயே ஹெல்மெட்டை கண்டுபிடிப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் இங்கிலாந்தில் தொடங்கின. அந்நாட்டில் மோட்டார்சைக்கிள் பந்தயங்களில், அதிவேகமாகச் செல்லும் வீரர்கள், கீழே விழுந்து அடிபடுவது சர்வ சாதாரணமாக இருந்தது. அடிபட்ட பலர் 'கோமா' நிலையில் பல ஆண்டுகள் படுத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது.

இதற்கு தீர்வை கண்டுபிடிக்க டாக்டர் எரிக்கார்ட்னர் நினைத்தார். தனது கண்டுபிடிப்பானது தலைக்கு கவசமாக இருக்க வேண்டும் என்றும், தலையை முழுமையாக காக்க வேண்டும் என்றும் முடிவு செய்தார். பல மருத்துவ கண்டுபிடிப்புகள் தானே மனித ஆயுளை கூட்டி இருக்கின்றன. இதுபற்றி மோஸ் என்ற வடிவமைப்பாளரிடம் கூறி, உறுதியான, அதிக எடையில்லாத தலைக்கவசத்தை தயாரிக்க கூறினார், டாக்டர் எரிக். 

இந்த நிலையில்தான் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களுக்கு தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. பல வீரர்கள் ஆரம்பத்தில் இதை எதிர்த்தாலும், கட்டாயம் காரணமாக அணிந்து கொண்டதால் தலையில் அடிபடுவது கணிசமாக குறைந்தது. இதனால் தலைக் கவசத்தின் மகத்துவம் உலகெங்கும் பரவதொடங்கியது. தலைக்கவசம் உயிர்காக்கும் கவசமாக மாறியது.

விபத்து ஏற்படும்போது, தலையில் அடிபட்டால் உண்டாகும் உள் மற்றும் வெளிக்காயங்கள் ஆரோக்கிய வாழ்வை மீட்டெடுக்க முடியாமல் செய்துவிடுகின்றன. பிற வாகனங்களைவிட இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குவது அதிகம். எனவே ஹெல்மெட் அணிந்திருந்தால் விபத்தின் போது தலைக்காயம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. தலையில் ஏற்படும் பெரிய அளவிலான காயங்களை 69 சதவீதமும், மரணத்தை 42 சதவீதமும் ஹெல்மெட் குறைக்கிறது என்று, ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.