ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சோளிங்கர் ஐயம்பேடு ஜெயந்தி மற்றும் அவரின் மகள்கள்.ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐயம்பேட்டையை சேர்ந்தவர் ராஜசேகர் (42). கூலித்தொழிலாளி. இவர் ஐயம்பேட்டில் புதியதாக வீடு கட்டி கடந்த 9ம் தேதி குடித்தனம் சென்றுள்ளார். மறுநாள் புதிய வீட்டில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ. ஒரு லட்சம் ரொக்கப்பணம் திருடு போயுள்ளது.

இதனால் அதிர்ச்சிய டைந்த ராஜசேகர், இது குறித்து சோளிங்கர் போலீ சில் புகார் செய்ததுடன், நான்கு பேர் மீது சந்தேகம் என்று எழுதி கொடுத்துள்ளார். அவர் சொன்ன நான்கு பேரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதோடு சரி. அதன் பிறகு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் நான்கு பேரையும் போலீசார் விடுவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனஉளச்சல், வேதனை அடைந்த ராஜசேகரின் குடும்பத்தினர் போலீசார் மீது உள்ள நம்பிக்கையை இழந்துள்ளனர். இந்நிலையில் தன்னுடைய நகையும், பணத்தையும் மீட்க முடியாது என்று புலம்பிக்கொண்டிருந்த ராஜசேகரின் மனைவி ஜெயந்தி(35), தனது மகள்கள் ஹேமாவதி (11), காய்த்ரி(9) இருவரையும் அழைத்துக்கொண்டு ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் (பழைய அலுவலகம்) வந்தார்.

அங்கு வந்த ஜெயந்தி, திடீரென தன் மீதும் தன் மகள்கள் மீதும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொள்ள முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு போலீசார் உடனடியாக ஜெயந்தி மற்றும் அவரின் மகள்களை மீட்டனர்.

பின்னர் மூன்று பேரையும் ராணிப்பேட்டை. எஸ்பி அலுவலகத்துக்கு அழைத்துச்சென்ற எஸ்பி தீபாசத்யன், அங்கு ஜெயந்திக்கு அறிவுரை கூறியதுடன், நகை, பணத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த சம்பவம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.